மரவள்ளி கிழங்கு
மரவள்ளி (உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது. இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும். "கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.
மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது. உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும். உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரி 10 டன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் டன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் ஹெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் ஹெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது.
No comments:
Post a Comment