கோடையின் கொடை நுங்கு – பதநிர்
கோடை விடுமுறை விட்டாச்சு. சூரியன் ஸ்ட்ராவைத்து, உடலில் இருக்கும் நீரை, உறிஞ்சத் தொடங்கிவிட்டது. அதை, ஈடுசெய்யாவிட்டால், உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகள் வந்துவிடும். வைட்டமின்கள், நீர்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த, நுங்கும் பதநீரும் உடலின் நீர் இழப்பைச் சரிசெய்யும்.
பனங்குருத்தைத் லேசாகச் சீவிவிட்டு, அதில் வடியும் நீரை,
மண்பாண்டத்தில் சேகரிப்பதே பதநீர். இனிப்புக் குறைந்த இந்த திரவம், ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் காற்றில் உள்ள பூஞ்சையால் நொதித்து, ‘கள்’ ஆகிவிடும். அதைத் தடுக்கவே, பானையின் உட்புறத்தில், லேசாகச் சுண்ணாம்பு தடவப்படுகிறது. நம் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது பதநீர். இதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம், இருமலுக்கு உகந்தது. கொதிக்கவைத்து ஆறவிட்டு, உடல் புண்களின் மேல் கட்டினால், காயம் சீக்கிரம் ஆறிவிடும்.
250 மி.லி பதநீரில் 113 கி.கலோரியும் 26 சதவிகிதம் சர்க்கரையும் உள்ளன. பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் உள்ளன. வைட்டமின் சி இதில் அதிகம். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தையமின் நரம்பு வளர்ச்சிக்கும், இதயத்துக்கும் நல்லது. ரிபோஃப்ளேவின், வாய்ப்புண்ணுக்கு நல்லது. நிக்கோடினிக் ஆசிட் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
பனை மரத்தின் பழத்தில், விதை உருவாகும் இடமே நுங்கு. பனம் பழம், இளம் காயாக இருப்பதையே நுங்கு என்று சொல்வோம். நீர்ச்சத்து நிறைந்த நுங்கு, வயிற்று உபாதைகளைப் போக்கும். நுங்கை, இளநீர் மற்றும் பதநீருடன் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.
100 கிராம் நுங்கில் மொத்தம், 43 கலோரிகளும், கால்சியம் 10 மி.லி.கிராமும், பாஸ்பரம் 20 மி.லி. கிராமும் இருக்கிறது. நுங்கில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, வயிற்றை நிரப்பி, பசிஎடுக்காமல் செய்துவிடும். உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் நுங்கு சாப்பிடலாம்.
நுங்கு, கற்றாழை ஜெல் இரண்டையும் மசித்து, பயத்தமாவு கலந்து, முகத்தில் பூசிவர, முகம் பிரகாசிக்கும். உடலில் தேய்த்துக் குளிக்கலாம். வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப்பளங்கள் போன்ற சரும நோய்கள் அண்டாது.
நுங்கில் உள்ள ஆந்தோசைனின் என்ற ரசாயனம், மார்பகப் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.
நுங்கில் உள்ள ஆந்தோசைனின் என்ற ரசாயனம், மார்பகப் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.
மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தைப் போக்கும் என்பதால், கர்ப்பிணிகள் அதிக அளவு எடுத்துக்கொள்ளலாம். குளிர்ச்சியானது என்பதால், உஷ்ண தேகம்கொண்டவர்கள் சாப்பிடலாம். இதில் உள்ள தாது உப்புக்கள் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.
பனை மரம்... இலை முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. நுங்கு, பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.
ஆண் - பெண் பனை
பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்துதான் நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். யதார்த்தம் இப்படியிருக்க பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் அதன்பிறகு நுங்கு கிடைக்காது. அப்படி நுங்கு கிடைக்காவிட்டால் பனம் பழம் கிடைக்காது.
சத்துகள் நிறைந்தது
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பனை நுங்கில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் உலோக உப்புகள், வைட்டமின் சி, சர்க்கரைச் சத்து போன்றவை உள்ளன. கோடை வாட்டி எடுக்கும் இந்தத் தருணத்தில் உடல் சூட்டைப் போக்கவும் வெம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் என்னென்ன ஏதேதோ பானங்களையும், செயற்கைக் குளிரூட்டிகளையும் அருந்துகிறோம். பனை நுங்கு, கோடைக்கு ஏற்ற நல்லதொரு உணவுப்பொருளாகும். இது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்குவதுடன் வைட்டமின் பி, சி போன்ற சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
ஜீரணம் கவனம்
பனைமரத்தின் காயை வெட்டினால் அதன் உள்ளே நுங்கு கண்களைப்போல தனித்தனியாக இருக்கும். இதை அப்படியே கைவிரலால் அழுத்தி எடுத்துச் சாப்பிடலாம். பெரும்பாலும் மூன்று நுங்குகள் இருக்கும். நுங்கின் மேல்தோல் துவர்ப்புத்தன்மையுடன் இருக்கும். சுவைக்கு அடிமைப்பட்ட நாம் உடனே தோலை நீக்கிவிட்டு வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவோம். இப்படி வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். சிறு குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால் அவர்களுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் அவற்றை நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்குக்கூட ஜீரணமாகாது என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. இளம் நுங்கே சாப்பிடத் தகுந்தது.
அம்மைநோய்க்கு மருந்து
பனை நுங்கு அம்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு நல்லதொரு மருந்தாகும். அம்மை நோய் பாதித்தவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, குடலில் உள்ள சிறு சிறு புண்களும் ஆறும். கோடையில் வியர்க்குரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பனை நுங்கை சாப்பிடுவதோடு, வியர்க்குருவின் மேல் தடவி வருவதன்மூலமும் நிவாரணம் கிடைக்கும். இது பசியைத்தூண்டுவதோடு, குமட்டலைக் கட்டுப்படுத்தி நீர்வேட்கையைப் போக்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது.
பதநீர்
பனைமரத்தில் நுங்கு பிஞ்சாக உருவாகும் முன்னர், அதை நசுக்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவர். பின்னர் அதன் நுனிப்பகுதியை லேசாக அறுத்து விடுவர். இவ்வாறு தினமும் சிறிதளவு அது அறுக்கப்படும். அதில் இருந்து சொட்டு சொட்டாக ஒருவகை திரவம் வடியும். அதை மண்பானையில் சேகரிப்பார்கள். சொட்டு சொட்டாக வடியும் அந்த திரவத்தை சேகரிக்கும் பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவினால் கிடைப்பது பதநீர். (அவ்வாறு சுண்ணாம்பு தடவாவிட்டால் அதன் தன்மை மாறி ‘கள்’ளாகிவிடும்.) கோடைக்காலங்களில் பிரசித்தி பெற்றது, பதநீர். வெயிலின் வெம்மையால் தவிப்போருக்கு பதநீர் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. ஆண் பனை, பெண் பனை இரண்டில் இருந்தும் பதநீர் இறக்கப்படுகிறது. அமிலத்தன்மை ஓரளவு காணப்படும் பதநீர் சுவையாக இருக்கும். இதில் காலை பதநீரும், மாலை பதநீரும் அருந்துவதற்கு இதமாக இருக்கும். கோடைக்காலங்களில்தான் பெரும்பாலும் பதநீர் பெறப்படுகிறது. மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறைந்து காணப்படும்.
இயற்கை பானம்
பதநீரை வெறுமனே கோடைக்கு ஏற்ற இயற்கைக் குளிர்பானம் என்று சொல்லிவிட்டு போய்விட முடியாது. இதில் கால்சியம், சர்க்கரைச் சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. ஆக, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பதநீரைக் குடிப்பதால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல்சூடு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம். 40 நாட்கள் தொடர்ந்து பதநீர் குடித்து வந்தால் மேக நோய்கள் விலகும். ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பாடாய்ப்படுத்தி வரக்கூடிய மேக நோய்களுக்கு பதநீர் நல்லதொரு மருந்தாகிறது. இவைதவிர உடல்வீக்கம், நெஞ்செரிச்சல், பித்தம் தொடர்பான கோளாறுகள், கல்லீரல் - மண்ணீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது பதநீர். சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு பதநீர் நல்ல பலன் தரும்.
கால்சியம் சத்து
பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கிறது. இது பற்களை வலிமையாக்குகிறது. பதநீர் பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பது, ரத்த சோகையை நீக்குவது போன்ற பணிகளைச் செய்கிறது. முற்காலங்களில் பதநீர் அருந்தி வந்த பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள் எதுவும் வராமல் இருந்தன. மேலும் அவர்களுக்கு மகப்பேறு காலங்களில் வரும் பிரச்னைகளை நீக்கி குழந்தை பெற்றபிறகு அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருந்தன. இதனால் தாயும், சேயும் நலமாக இருந்தனர். இதுதவிர கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, பற்களில் ஏற்படும் பிரச்னைகள் எதுவும் அவர்களை நெருங்காமல் இருந்தன. அதன் அடிப்படையில் இந்த பதநீரை அருந்துவதன்மூலம் தாயும் சேயும் நலம் பெறலாம். பதநீரை தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் நீங்கும். குறிப்பாக விந்தணுக்களில் உள்ள உயிரணுக் குறைபாட்டை சரி செய்யும். நரம்பு மண்டலம் பலம் பெறுவதோடு தலைமுடி நரைப்பது தள்ளிப்போகும்.
மற்றபடி பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றுக்கும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.
No comments:
Post a Comment